ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் உள்ளார்- முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் இதுவரை ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது ஒவ்வொரு பாடலிலும் பல்வேறு புதுமைகளை வெளிப்படுத்தும் இவர் தனது திறமை மூலம் படிப்படியாக உச்சத்திற்கு சென்றார்.
ரசிகர்களால் ‘இசைப்புயல்’ என்று அழைப்படும் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆங்கில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படும் இவர் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
மிகவும் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடைசியாக ‘அயலான்’, ‘ராயன்’, ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த ஏ.ஆர். ரகுமான் தனது மனைவியை பிரியப்போவதாக அண்மையில் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் பலரும் பல்வேறு வதந்திகளை பரப்பி வந்தனர். இதற்கு ஏ.ஆர்.ரகுமானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் பதிலடி கொடுத்தனர். இப்படி பல்வேறு தடைகளை தாண்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன் இசைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை 7:30 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் உடல்நலம் பெற ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?






