தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்- உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழக உள்துறை அமைச்சர் தீரஜ் குமார் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Jan 31, 2025 - 14:48
 0
தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்- உயர்நீதிமன்றம் அதிரடி
கோப்பு படம்

சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு சமீபத்தில் நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2015-ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்த பின், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல எனவும், தமிழகம் முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இதனால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுவதாகவும், நீதிமன்றத்தை நாட இயலாத ஏழை மக்கள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதி, நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

வழக்குப்பதிவு செய்யக் கோரியும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது, காவல் துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதையே காட்டுகிறது என நீதிபதி  சுட்டிக்காட்டினார். காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளருக்கு தெரியுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, தீரஜ் குமாரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 31-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்துறை செயலாளர் தீரஜ் குமார் நேரில் ஆஜராகாத நிலையில் மாலை 4.30 மணிக்குள் தமிழக அரசின் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும், உள்துறை செயலாளர் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow