"விஜயகாந்த் போல இருக்கிறாய்" - போலீஸாரை கலாய்த்த ஜோடியின் மற்றொரு வீடியோ
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். காவலர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, லூப் சாலையில் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவர்களிடம் அங்கிருந்து கலைந்து போகக்கூறிய போது தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
அப்போது, சாலையில் நிறுத்தட்டு இருந்த காரை எடுக்கும்படி போலீசார் காருக்குள் இருந்த ஜோடியிடம் கேட்டுள்ளனர். ஆனால் ரோந்து போலீஸாரை மிகவும் இழிவாக பேசிய, அந்த ஜோடி அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மெரினா கடற்கரையில் காவல்துறையினரிடம் தகராறு செய்த ஜோடி, 15 வருடங்களாக இருவரும் தகாத உறவில் இருந்து வருவதாகவும், தினமும் மெரினாவில் காரில் வந்து குடிப்பதாகவும், இருவருக்கும் திருமணம் நடைபெற்று பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது.
இந்த காணொளி வைரலான நிலையில், காவல்துறையினரை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரையும் நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இருவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சந்திரமோகன் ஏற்கனவே பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் காவல் துறையினரை மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் மதுபோதையில் சுற்றுலா பயணி போல தோழியோடு அமர்ந்து கொண்டு நள்ளிரவு 1 மணியளவில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.
அப்போது போலீசார் வீடியோ எடுத்த போது, போலீசாரை சந்திரமோகன் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது, ‘விஜயகாந்த் போல இருக்கிறாய் என கூறியும், யாரை வேண்டுமானாலும் அழைத்து வா என்னை எதுவும் செய்யமுடியாது’ என கூறி மிரட்டுவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
மேலும் தோழியுமான தனலட்சுமியும் மிரட்டுவது அந்த வீடியோவில் இருக்கிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். பட்டினப்பாக்கம் போலீசார் இந்த மிரட்டல் குறித்து வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?