சென்னைக்கு படையெடுக்கும் மக்களால் பரனூர், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் மக்கள் படையெடுத்து சென்றனர்.இந்த நிலையில் விடுமுறை முடிந்த நிலையில், வழக்கமான பணிகளுக்கு செல்லும் விதமாக மக்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இதனால், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்பும் பொருட்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினர். இதன் காரணமாக கிளாம்பாக்கம், தாம்பரம் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் மாநகர பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு பயணிகள் ஏறிச் செல்கின்றனர்.
விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி படையெடுத்ததால் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு, பரனூர், சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் வரை போக்குவரத்து பாதிப்பு இருந்தது. மேலும் கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்னை திரும்பியதால், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.