தவெகவில் இணையும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் நிர்மல் குமார்?
Nirmal Kumar Join TVK : அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Nirmal Kumar Join TVK : வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் ரேஸில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியுடன் நடிகர் விஜய் களத்தில் குதித்துள்ளார். இதற்கான பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் சமூக பிரச்சனைகளுக்கு சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு கண்டனம் தெரிவித்த விஜயை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். களத்தில் மக்களை சந்திக்காமல் விஜய் இணைய தள அரசியல் செய்வதாக விமர்சித்தனர். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
தொடர்ந்து, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நேரில் சந்தித்தார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் தனது கட்சியை உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதையடுத்து, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் இரண்டு கட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்று (ஜன 31) தஞ்சை மேற்கு மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் உள்பட 19 மாவட்ட செயலாளர்கள் தேர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக 19 மாவட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிமுக தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் தவெகவில் முக்கிய பொறுப்பை விஜய் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும் இவருக்கு விஜய் முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
What's Your Reaction?