வரிக்குதிரையின் வரியை எண்ணிவிடலாம்! ஆனால்.. செல்லூர் ராஜூ பஞ்ச்...
Sellur Raju on DMK Government : மின்கட்டண உயர்வு மற்றும் நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் வழங்காததைக் கண்டித்து மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
Sellur Raju on DMK Government : தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின் வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் மின் நுகர்வு மற்றும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்தியது. மேலும், கடந்த ஆண்டு ஜூலையில் 2.18 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதோடு, 2026 - 27 வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
அதன்படி புதிய மின் கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியது. உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணத்தின் படி, ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு வசூலிக்க முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக அரசின் மின்கட்டண உயர்வு மற்றும் நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் வழங்காததைக் கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக சார்பில் மதுரை மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஷாக் அடிப்பது மின்சாரமா.? மின் கட்டணமா.? என முதல்வர் ஸ்டாலின் 2020-ல் கருப்புக்கொடி ஏந்தி அதிமுகவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டத்தை குறிப்பிட்டு பொம்மைக்கு கருப்பு சட்டை அணிந்து உருவப்படம் வைத்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, திமுக அரசிற்கு எதிராக பல்வேறு கோஷம் எழுப்பி கண்ட முழக்கமிட்டு கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் செவிடன் காதில் விழுந்த சங்கு போல் திமுக அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. வாலி திரைப்படத்தில் வரும் காமெடியில் தாடி பாலாஜிக்கு உடல் முழுவதும் பிரச்சனை இருக்கும் அது போல திமுக ஆட்சியில் ஒரு துறைக்கூட சிறப்பாக செயல்படாமல் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது.
திமுக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கொடுக்கும் அரிசியை கோழிக்கு போட்டால் கூட கோழி வீட்டுபக்கம் வருவதில்லை. நாய் கூட வாலை நிமிர்தவில்லை. வரிக்குதிரையின் வரியை கூட எண்ணிவிடலாம்.! ஆனால், திமுக அரசு உயர்த்திய வரிக் கட்டணத்தை எண்ண முடியாது.
அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டார்கள். வருகின்ற காலங்களில் திமுகவிற்கு இருண்ட காலம் தான். திமுக ஆட்சியில் ஒரு மாநில தலைவரே கொலை செய்யப்படுகிறார்.
காவல்துறையை பார்த்து ரவுடிகள் யாரும் பயப்படுவதில்லை, திமுக பொறுப்பற்ற அரசாக உள்ளது. பட்டம் பெறுவதற்கு 1000 ரூபாய் கொடுப்பதாக வாய் கொழுப்பில் ஆர்.எஸ்.பாரதி பேசுகிறார். வருகின்ற 2026ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் திமுக விற்கு சுளுக்கெடுத்து "ஷாக்" கொடுப்பார்கள்” என அவர் பேசினார்.
What's Your Reaction?