சினிமா

Suriya: “சிகரெட்டுடன் தான் நடிக்கணுமா... அடிப்படை அறிவு கூட இல்ல..?” சூர்யாவை வெளுக்கும் பிரபலங்கள்

Actor Surya 44 Glimpse Video Trolled : சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 44வது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், சூர்யா சிகரெட்டுடன் நடித்துள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. சூர்யாவுக்கு அடிப்படை அறிவு கூட இல்லையா என பிரபலங்கள் சிலர் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளனர்.

Suriya: “சிகரெட்டுடன் தான் நடிக்கணுமா... அடிப்படை அறிவு கூட இல்ல..?” சூர்யாவை வெளுக்கும் பிரபலங்கள்
Suriya 44
Actor Surya 44 Glimpse Video Trolled : சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘சூர்யா 44’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அந்தமானில் தொடங்கிய சூர்யா 44 படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இன்று வெளியான சூர்யா 44 கிளிம்ப்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த வீடியோவில் சூர்யா சிகரெட் பிடித்தபடி நடந்து வருவதை பலரும் விமர்சித்துள்ளனர்.  
 
கழுத்தில் ரத்த கறையுடன் சிகரெட் புகைத்துக்கொண்டு என்ட்ரி கொடுக்கும் சூர்யா, துப்பாக்கியில் குறி பார்ப்பதாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது. சூர்யா ஒரு நடிகராக மட்டுமில்லாமல் அகரம் பவுண்டேஷன் மூலம் பல மாணவ, மாணவிகளின் கல்விக்காகவும் உதவி செய்து வருகிறார். அதேபோல் இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என அடிக்கடி விழிப்புணர்வும் செய்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும், மேடைகளில் பேசும்போதும் மட்டும் போதைப்பொருட்களுக்கு எதிராக பொங்கும் சூர்யா, தான் நடிக்கும் படங்களில் இப்படித்தான் சிகரெட்டுடன் வலம் வருவதா என விமர்சித்துள்ளனர்.  

இதுபற்றி அனைத்து மக்கள் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா ட்வீட் செய்துள்ளார். விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடியா’ பாடலின் வரிகளை மாற்ற வேண்டும் என நீதிமன்றம் வரை சென்று, அதில் வெற்றியும் பெற்றார் இவர். இப்போது சூர்யாவுக்கு எதிராக சாட்டையை சுழற்றியுள்ளார் ராஜேஸ்வரி பிரியா. அவரது டிவிட்டர் பதிவில், “சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரே வைக்காத புதிய படத்தின் டீசர் காட்சியில் சிகரெட் புகைத்தபடி வருவது கேடு கெட்ட காட்சியாக உள்ளது.”
 
“உங்கள் தம்பி நடிகர் கார்த்தி புகை பிடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கொள்கை பிடிப்போடு உள்ளார். உங்கள் அப்பா ஒரு பிள்ளைக்கு நல்லது சொல்லி கொடுத்து உங்களுக்கு சொல்லி கொடுக்க மறந்துவிட்டாரா? அல்லது தந்தை சொல்லை மதிக்கவில்லையா? உங்கள் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? உங்கள் நடிப்பை நம்பாமல் எப்போது சிகரெட்டை நம்பினீர்களோ அப்போதே நடிகராக தோற்று போய்விட்டீர்கள் சூர்யா” என விளாசியுள்ளார். ராஜேஸ்வரி பிரியாவின் இந்த பதிவுக்கு சிலரிடம் வரவேற்பு இருந்தாலும், சூர்யா ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

 
இன்னொரு பக்கம், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் சூர்யாவை பங்கம் செய்துள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில், ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் திமுக அரசின் அலட்சியம் என பொங்கிய சூர்யா, சிகரெட்டுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இளைஞர்களை தவறாக வழி நடத்துவதை தவிர்க்க வேண்டுமென பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது முதல் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்காமல் தவிர்த்தவர் ரஜினி, இது யாருடைய அலட்சியம்? போதைப் பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராய அழிப்பு என ஒருபக்கம் இளைஞர்களுக்கு உபதேசம். மறுபக்கம் அப்படியான பழக்கங்களை ஊக்குவித்து இளைய சமூகத்தை நாசம் செய்ய முயல்வது. அடுத்த போஸ்டரில் சாராய பாட்டிலுடன் நிற்பார் போல” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
லோகேஷ் கனகராஜ்ஜின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யா. அதிலும், சிகரெட் புகைத்தபடி, கையில் கத்தியுடன் டெரராக நடித்த சூர்யாவுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். என்னதான் சினிமாவாக இருந்தாலும், சூர்யா போன்ற ஹீரோக்கள் இளைஞர்களை தவறாக வழிநடத்தக் கூடாது என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சூர்யா 44 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் கொடுக்கும் போதாவது, சூர்யா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.