Chennai Rain: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
சென்னையில் நள்ளிரவில் தொடங்கிய கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியொடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் நள்ளிரவில் தொடங்கிய கனமழை, விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனிடையே, தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு நாட்களில் நிலைபெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலரட் விடுக்கப்பட்டுள்ளதால், அடுத்த 3 மணி நேரத்திற்கு 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை திருச்சி, நாமக்கல், கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடதமிழக மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரெட் அலர்ட் காரணமாக மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநாகராட்சியும், தமிழக அரசும் செய்து வருகிறது. அதன்படி பேரிடர் மீட்பு படையினர், படகுகள், மோட்டார் பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டு அறையில் ஊழியர்கள் போதிய அளவிற்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சென்னை வானிலை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை தொடங்கும் இயல்பு தேதி அக்டோபர் 20 என்றார். தற்போது அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் 2 நிகழ்வுகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், தென்மேற்கு பருவமழை இன்று பல இடங்களில் விலகி உள்ளது. விரைவில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றார்.
இந்நிலையில், சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை வெளுத்து வாங்கும் கனமழையால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. அண்ணாசாலை, கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, தியாகராய நகர், மதுரவாயல், வளசரவாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இதேபோல், காலை முதல் கோயம்பேட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கொட்டும் மழைக்கு இடையே காய்கறி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக மழை காரணமாக சரசரவென காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அதில் தக்காளிச் சந்தையில் 120 ரூபாய்க்கும், சில்லரை விற்பனையில் கிலோ 150 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். முன்னதாக மழை தொடர்பான முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிக்கரணை, அம்பேத்கர் சாலையில் உள்ள ஏரிக்கரை, திருவல்லிக்கேணி பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். கடந்த ஆண்டு சென்னையில் தண்ணீர் தேங்கிய இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
What's Your Reaction?