தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தல்.. கார் ஓட்டுனர் கைது..!
கோவையில் தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுவனை காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

கோவை மாவட்டம் வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கார் ஓட்டுநராக கரூரைச் சேர்ந்த நவீன் என்பவர் பணிக்கு சேர்ந்து உள்ளான். தினமும் 10 வயது சிறுவனை காரில் டியூசனுக்கு அழைத்துச் சென்று மீண்டும், வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளான் கார் ஓட்டுனர் நவீன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம் வாங்க ஸ்ரீதர் இடம் 12 லட்சம் ரூபாய் கார் ஓட்டுநர் நவீன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதர் மகனை அழைத்து வருவதாக கூறிவிட்டு டியூசன் சென்டருக்கு சென்று உள்ளார் கார் ஓட்டுநர் நவீன். ஆனால், அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு வரவில்லை, நீண்ட நேரமாக மகன் மற்றும் ஓட்டுநர் நவீன் வராததால் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி கீர்த்திகா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஓட்டுனர் நவீனை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் டிரைவர் நவீன் சரவணம்பட்டியில் ஸ்ரீதர் கொடுத்து வைத்து இருந்த ஏ.டி.எம் கார்டு மூலம் பணத்தை எடுத்து இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு நவீன் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு அவர் கொடுத்த 12 லட்சம் பணத்தை திரும்பி தரும்படி கேட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் ஸ்ரீதர். இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்திய கார் ஓட்டுநர்
நவீனின் பேசிய தொலைபேசியின் சிக்னலை வைத்து தேடி வந்தனர்.
குழந்தை கடத்திய கார் ஓட்டுநர் நவீன் மீண்டும் அழைத்து ரூபாய் 25 லட்சம் அதிக பணம் வேண்டும் எனக் கேட்டு மிரட்டல் விடுத்து உள்ளார். அவரின் தொலைபேசி சிக்னலை வைத்து ஓட்டுனர் நவீன் ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றின் நடுவே இருப்பதை கண்டுபிடித்த காவல் துறையினர். இது குறித்து ஈரோடு மாவட்டம், பவானி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பவானி காவல் துறையினர் சிறுவனுடன் பவானி ஆற்றில் மறைந்து இருந்த நவீனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைது செய்த நவீனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஸ்ரீதர் ரியல் எஸ்டேட்டில் 12 லட்சம் பணம் முதலீடு செய்தால் மாதம் வட்டி வழங்கப்படும் என்றும் கூறிய தகவலை அடுத்து, அதில் நவீன் பணம் முதலீடு செய்து இருந்தார். ஸ்ரீதரிடம், நவீன் தான் கொடுத்த பணத்தை திரும்பி தரும்படி கேட்டு வந்து உள்ளார். ஆனால் ஸ்ரீதர் பணத்தை திரும்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது மகனை டியூசனுக்கு சென்று அழைத்து வருவது போல் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
சிறுவனை மீட்ட காவல் துறையினர் பெற்றோரிடம் அவனை ஒப்படைத்தனர். பணத்திற்காக சிறுவன் கடத்தப்பட்ட இந்தச் சம்பவம் துடியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?






