தமிழ்நாடு

திருட்டு வழக்கில் சிக்கிய ஞானசேகரன்.. 80 சவரன் நகை பறிமுதல்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை பள்ளிக்கரணை போலீசார் கொள்ளை வழக்கில் கைது செய்த நிலையில், மேலும் ஆறு கொள்ளை வழக்கில் கைது செய்து, அவரிடம் இருந்த 80 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருட்டு வழக்கில் சிக்கிய ஞானசேகரன்.. 80 சவரன் நகை பறிமுதல்
திருட்டு வழக்கில் சிக்கிய ஞானசேகரன்.. 80 சவரன் நகை பறிமுதல்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஞானசேகரன் மீது நிலுவையில் இருந்த வழக்குகளை தமிழக காவல் விசாரித்து வருகிறது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் தொடர்ச்சியாக பங்களா, வில்லா போன்ற வீடுகளை குறிவைத்து பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

ஞானசேகரனிடம் நேற்று நடத்திய விசாரணையில்,  கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தார் வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் அவரிடமிருந்து 80 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தமாக ஏழு கொள்ளை சம்பவங்களில் 250 சவரனுக்கும் அதிகமாக  கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அந்த வழக்குகளில் இருந்து 80 சவரன் நகைகளை பள்ளிக்கரணை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் விவரங்கள் குறித்தும் வேறு என்னென்ன வழக்குகளில் இவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது குறித்தும் பள்ளிக்கரணை போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கொள்ளை வழக்கில் ஞானசேகரனை பள்ளிக்கரணை போலீசார் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.