2019 டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்காமல், இந்த கொரோனா வைரஸ் ஆடிய ருத்ரதாண்டவம் கொஞ்சம் நஞ்சமல்ல. லாக் டவுன், சானிடைசர், மாஸ்க், குவாரண்டைன் என உலகமே ஒரு குடுவைக்குள் அடங்கிக் கிடந்தது. மாதக் கணக்கில் நீட்டிக்கப்பட்ட லாக் டவுன் பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது. ஒருவழியாக கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து இப்போது தான் மக்கள் மூச்சுவிட ஆரம்பித்துள்ளனர். அதற்குள்ளாக அடுத்த அதிர்ச்சி கொடுத்துள்ளது சீன ஆராய்ச்சி நிறுவனம்.
சீனாவில் உள்ள குவாங்சோ ஆய்வகத்தில், வைராலஜிஸ்ட் ஷி ஜெங்லி தலைமையில் புதிய வைரஸ் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. அதில், புதிய வௌவால் கொரோனா வைரஸ்ஸான HKU5-CoV-2 கண்டறியப்பட்டுள்ளது. வௌவால்களில் இருந்து பரவும் இந்த வைரஸ் ஒருசில மனிதர்களை மட்டுமே பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கில் உள்ள ஜப்பானிய பைபிஸ்ட்ரெல் வௌவாலில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட HKU5 கொரோனா வைரஸின் பரம்பரையைக் கண்டறியும் போது, HKU5-CoV-2 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம்.
2019ல் பரவிய கொரோனாவுடன் ஒப்பிடும்போது, SARS வைரஸ்களை எதிர்கொள்ள மக்களிடையே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், இது தொற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் வெளவால் கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 70 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இது உலக வரலாற்றில் ஐந்தாவது கொடிய தொற்றுநோய் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில் தற்போது வெளியாகியுள்ள வெளவால் வைரஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் மீண்டும் ஒரு கோவிட் 19 சம்பவம் வர வாய்ப்பில்லை என மருத்துவ வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.