நான் திமுக காரன்.. இடம் மாறிச்சுன்னா எங்க ஓட்டு விஜய்க்குதான்!,.. வியாபாரிகள் ஆவேசம்!
பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரத்திற்கு மாற்றினால் வரும் தேர்தலில் எங்கள் வாக்கு விஜய்க்கு தான் என பிராட்வே பேருந்து நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் முக்கியமான மற்றும் பழமையான பேருந்து நிலையமாக பார்க்கப்படுவது பிராட்வே பேருந்து நிலையம். தினம்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இப்பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு சுமார் ரூ.823 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. அதாவது புனரமைப்பு பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டு பின்னர் அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிராட்வே பேருந்து நிலைய புனரமைப்பு பணிகளுக்காக, அந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரம் என்.ஆர்.டி.மேம்பாலம் அருகே உள்ள சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து, டெண்டர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், “ நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக பிராட்வே பேருந்து நிலையத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். எங்களது குடுப்பம் இதை நம்பித்தான் இருக்கிறது. எங்களை நம்பி ஏராளமானோர் இருக்கிறார்கள். எங்களுக்கு கடைகளை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்க் அதன் பிறகுதான் நாங்கள் இங்கு இருந்து போவோம் என்று உறுதியாக இருக்கிறோம்” என பிராட்வே பேருந்து நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “பல ஆண்டுகளாக நாங்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகிறோம். இதை ராயபுரத்திற்கு மாற்றினால் எங்களுக்கு கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும். எனவே இப்பகுதியில் கட்டிடம் கட்டினாலும் பேருந்தை இங்கிருந்து இயக்க வேண்டும். இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் ஆட்சி இருக்கிறது. இப்படியே செய்து வந்தால் நாங்கள் விஜய்க்குதான் ஓட்டு போடுவோம். நான் ஒரு திமுக காரன். இருந்தாலும் எனது வாக்கு விஜய்க்குதான் என வியாபாரி ஒருவர் ஆக்ரோஷமாகக் கூறினார். ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாற்றியதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம், இதையும் மாற்றம் செய்தால் நாங்கள் போராட்டம் செய்வோம். எனவே இந்த பேருந்து நிலையத்தை எந்த மாற்றமும் செய்யாமல் இப்படியாகவே இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?