சுரேஷ் கோபி பீதியை கிளப்புகிறார்.. அரைவேக்காட்டுத்தனமாக பேசக் கூடாது - செல்வப்பெருந்தகை கண்டனம்
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக கூறியிருக்கிறார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கட்டடங்கள், அங்கு இருந்த பள்ளிகள், வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட அச்சத்தை தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக் கட்ட வேண்டும் என்று கேரளாவில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா அரசு நிலைப்பாடு எடுத்துள்ளது.
இதற்கிடையில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதலங்களில் இதற்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள மக்களும், அம்மாநில அரசியல்வாதிகளும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். வலைதளங்களில் இதற்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுரேஷ் கோபி, “சமீபத்தில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பும் சமூக வலைதளப் பதிவு ஒன்றை பார்த்தேன். அணை இடிந்து விழுமா, இல்லையா என்ற கேள்வி என் மனதில் ஏற்படுகிறது.
ஒருவேளை அணை உடைந்தால் யார் பொறுப்பு? அணையில் தண்ணீர் நிரப்புவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் பொறுப்பேற்குமா? அல்லது அந்த உத்தரவுகளை அமல்படுத்தும் அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா? விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதில் வேண்டும். மீண்டும் ஒரு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், சுரேஷ் கோபியின் கருத்துக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய பாஜக அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். மேலும், இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
இத்தகைய கூற்றின் மூலம் சுரேஷ் கோபி தனது அறியாமையைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த கால முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்பட்ட பிரச்சினைகளும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் படிக்காமல் ஏனோ தானோ என்று அரைவேக்காட்டுத்தனமாக ஆதாரமற்ற இத்தகைய கருத்துகளை கூறியிருக்கிறார். இந்த கூற்றின்படி நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணையை பொறுத்தவரையில் தமிழக நீர்பாசனத்திற்கு பயன்படுகிற அணையாகும். இந்த அணை கேரள மாநிலத்தில் இருந்தாலும், அதை பராமரிக்கிற பொறுப்பு தமிழக பொதுப்பணித்துறைக்கு தான் இருக்கிறது. இதுகுறித்து பிரச்சினைகள் ஏற்பட்ட போது, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியதால் 27.2.2006 இல் அதன் தீர்ப்பின்படி அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என ஆணையிட்டது. இந்த அணையின் வலிமை குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை கூறியது.
இந்நிலையில் கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றி தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க முயற்சி செய்தது. ஆனால், இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் 07.05.2014 அன்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கேரள அரசு இயற்றிய சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்ட முடியாது, வல்லுநர் குழு அறிக்கையின்படி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம், புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் உரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும் போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய பா.ஜ.க. அமைச்சர் தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா அல்லது இந்தியா முழுமைக்குமான அமைச்சரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் பேச்சு குறித்து பிரதமர் மோடி தலையிட்டு மத்திய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இந்த கருத்து மத்திய அமைச்சரின் கருத்தா அல்லது பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
ஏற்கனவே காவிரி பிரச்சினையில் அண்டை மாநிலமான கர்நாடகத்திடம் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் இன்னொரு அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் போராடுகிற நிலைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி தள்ளியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. கூட்டாட்சி தத்துவத்தில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் இதுகுறித்து அவரது கருத்தை வெளியிட வேண்டும்.
எனவே, மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?