இந்துக்களை மதிக்காத விஜய்...? பஞ்சாயத்தை கூட்டிய பாஜக... திமுக B Team-ஆ தவெக..?

எல்லா பண்டிகைகளுக்கும் முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லும் நடிகரும் தவெக தலைவருமான விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளது பாஜக. 

Sep 8, 2024 - 08:14
 0
இந்துக்களை மதிக்காத விஜய்...? பஞ்சாயத்தை கூட்டிய பாஜக... திமுக B Team-ஆ தவெக..?

உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி தேசிய தலைவர்கள், தமிழ்நாடு தலைவர்கள் என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனால், கடவுள் மறுப்பு பேசும் திமுகவின் தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எந்தவித வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. இதுவே பலர் மத்தியில் அதிருப்தியை ஏறபடுத்தியது. காரணம் பிற மத பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்துச் சொல்லும் முதலமைச்சர், இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறாதது ஏன்? இந்துக்களை புறக்கணிக்கிறதா திமுக? கடவுள் மறுப்பு என்றால் வெறும் இந்து கடவுள்களை மறுப்பதுதானா? என்று இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். 

இந்த நிலையில், மங்களகரமான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறக் கொடியை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டி அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். 

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், மாநாடு பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார். மேலும், மாநாட்டிற்கு வரும் அனைத்து தடைகளையும் உடைத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சி தொடங்கிய நாளில் இருந்து கட்சி கொடி அறிமுகம் செய்தது வரை, விஜய் மீதும் தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பது நிதர்சனமே. இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு முக்கிய பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறுவது விஜய்யின் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்திக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து சொல்லாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம், தவெகவின் ஒவ்வொரு அறிக்கையிலும் இறைவனும் இயற்கையும் என்ற வார்த்தை இருக்கும்.

அதேபோல் எல்லா நிகழ்ச்சிகளிலும் நெற்றியில் குங்குமமோ/விபூதியோ/சந்தனமோ வைத்துக்கொண்டு தான் கலந்துகொள்வார் விஜய். இதனால் அவரது கொள்கை ஆன்மிக அல்லது இந்துத்துவ கொள்கையாகத்தான் இருக்கும் என்று இந்து அமைப்புகளும் பாஜக போன்ற முக்கிய கட்சிகளும் அவரது அரசியல் வருகையை வரவேற்றதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காததை சுட்டிக்காட்டிய பாஜக பிரமுகர் வினோஜ் பி செல்வம், “இந்த ட்வீட்டை பதிவிடுவதற்கு 7 மணி வரை காத்திருந்தேன், புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் நடுநிலையான முகம் தெரியவரும் என்றிருந்தேன். ஆனால், சிறுபான்மையினரை மகிழ்ச்சியாக்கும் திமுகவின் அதே பழைய தந்திரத்தை கடைபிடித்து, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. விரைவிலேயே சிந்திக்க சூழல் உருவாகிவிட்டது மக்களே” என்று திமுகவுடன் விஜய்யை இணைத்து குறிப்பிட்டுள்ளார். 

https://x.com/VinojBJP/status/1832412091946271034

இந்த பதிவிற்கு கீழ் கமெண்ட்ஸ் செய்துவரும் பலரும், விஜய் திமுகவின் பி டீம் என்றும், அதனால் தான் அவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை... விரைவிலேயே அவர் கமல்ஹாசனைபோல திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியம் இல்லை என்றும் கூறி வருகின்றனர். 

விநாயகர் சதுர்த்தி அன்று தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக வெளியாகி இருந்த அறிவிப்பால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்த தவெக நிர்வாகிகள், வினோஜ் பி செல்வத்தின் பதிவை பார்த்ததும் கொதித்து போயுள்ளனர். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததால் அவர் இந்துக்களுக்கு எதிரானவராகிவிடுவாரா? திமுகவையும் தவெகவையும் ஏன் இணைக்கிறீர்கள்? தவெக வழிவேறு திமுக வழி வேறு என்று பதில் கருத்துகளை கூறி வருகின்றனர். 

மறுபக்கம் ஏற்கனவே, கோட் படத்தை வைத்து நடிகர் அஜித் ரசிகர்கள் செய்துவரும் கமெண்டுகளுக்கு பதிலடி கொடுத்துவரும் ரசிகர்களும், பாஜக நிர்வாகியின் இந்த கருத்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால் பாஜக Vs தவெக சண்டை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்றே சொல்ல வேண்டும். இந்த மோதலில் வெற்றி அடையபோவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow