2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைப்பு
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்தாண்டிற்கான தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இதையடுத்து, ஜனவரி 11-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு நாளை காலை 9.30 மணிக்கு பேரவை மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று நடைபெற்ற முதல் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி யாரும் எதிர்பாராத விதமாக பேரவையை விட்டு திடீரென வெளியேறினார். அதாவது, பேரவை தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக, தவெக உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.
இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சரிடமும், சட்டப்பேரவை சபாநாயகரிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்” என்று ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதை கண்டித்து சென்னையில் திமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
‘தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர்; அவரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?