திருப்பதி - பழனி மீண்டும் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை- பவன் கல்யாண் தகவல்

திருப்பதியில் இருந்து பழனிக்கு மீண்டும் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் போல் திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் தரிசனம் எளிமையாக்கப்படும்  என்றும்  ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Feb 15, 2025 - 11:06
 0
திருப்பதி - பழனி மீண்டும் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை- பவன் கல்யாண் தகவல்
பவன் கல்யாண்

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் ஆன்மிக பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள முருகன் கோயிலான அறுபடை வீடுகளில் சாமி தரிசனம் செய்து வருகின்றார். இந்நிலையில், முருகப் பெருமானின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்த அவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து, மூலவர் சந்நிதி முன்பு தரையில் அமர்ந்து மனமுருகி சாமி தரிசனம் செய்ததைத் தொடர்ந்து திருக்கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளிலும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற பலநாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. இது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் அன்பு என்னை நெகிழ வைத்துள்ளது. நான் ஏற்கனவே 10 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்ததால் தமிழக மக்களின் அன்பு எனக்கு நன்றாக தெரியும். தற்போது தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளின் தேவைகளுக்கு ஏற்ப கோயிலின் வளர்ச்சிக்கு தன்னுடைய உதவிகளை செய்ய தயாராக உள்ளேன்.  மேலும் திருப்பதி -பழனி பேருந்து போக்குவரத்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த பேருந்து மற்றும் ரயில் சேவை பக்தர்களின் வசதிக்காக மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் எளிமையாகவும், விரைவாகவும் சாமி தரிசனம் செய்வது போன்று, திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பழமுதிர்ச்சோலையில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சென்ற ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், அரக்கோணம் சென்று அங்கிருந்து கார் மூலம் திருத்தணி முருகன் கோயில் செல்ல உள்ளார். இதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு  அரக்கோணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இறங்கி அங்கிருந்து திருத்தணி சொல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow