சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே சார்லஸ் அலெக்சாண்டர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1958-ஆம் ஆண்டு எஸ்.பி ஆதித்தனாரால் ’நாம் தமிழர் கட்சி’ தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின், இயக்குநர் சீமான் 2010-ம் ஆண்டு முதல் தலைமை ஒருங்கிணைப்பாளராக கட்சியை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், எல்.டி.டி.இ மற்றும் இலங்கை அரசுக்கும் இடையே 2009-ம் ஆண்டு போர் நடைபெற்ற போது எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சீமான் போர் முனையில் நேரில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்புக்கு பின் ஏ.கே 47 ரக துப்பாக்கியில் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை செய்து வருகிறார்.
மேலும் படிக்க: தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கு கூச்சமில்லையா? அண்ணாமலை ஆதங்கம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்தபோது குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். இதையடுத்து எல்.டி.டி.இ அமைப்புக்கு இந்தியாவில் தடை விதித்ததுடன், கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இலங்கை போர் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையிலும் "மார்பிங்" செய்யப்பட்ட புகைபடங்களையும் சீமான் பயன்படுத்தி வருகிறார்.
எல்.டி.டி.இ அமைப்புக்கு தடை விதித்திருக்கும் போது, அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் பிரபாகரனின் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார். மேலும், பிரபாகரனுடன் தான் இருப்பது போலவும், ஏ.கே 47 துப்பாக்கியை வைத்திருப்பது போலவும் மார்பிங் செய்து படங்களை பயன்படுத்தி வருகிறார் என எல்.டி.டி.இ மற்றும் சங்ககிரி ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார். அதனால், தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய- மாநில அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால், பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.