எடப்பாடி பழனிசாமி அற்ப அரசியல் செய்கிறார்... லெஃப்ட் ரைட் வாங்கிய மா.சுப்பிரமணியன்!
தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் திமுக சார்பில் பழங்குடியின மக்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர். மா.சுப்பிரமணியன், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.
அதில், “நேற்றைக்கு (நவ. 20) எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் நல்வாழ்வுத் துறை மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் மாரடைப்பிலிருந்து மீண்டு உயிர் காக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 12,317 ஆக உயர்ந்துள்ளது. இது திமுக ஆட்சியின் சாதனையாகும். மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் பத்துக்கும் மேற்பட்ட திமுக அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் தினந்தோறும் பயனடைந்து வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியா? அல்லது எரிச்சல் சாமியா? என்ற அளவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு பரப்புகிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்பதை உணராமல் காழ்ப்புணர்ச்சியால் அறிக்கை விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்காதீர்கள்.
கடந்த முறை தாளவாடி மலைப்பகுதிக்கு வந்தபோது பிரேத பரிசோதனை செய்ய ஆய்வுக்கூடம் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தாளவாடி மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் பிரேத பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறினோம். அதன்படி தமிழகத்திலேயே முதல் முறையாக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடற்கூராய்வு செய்ய ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது. அது இன்று பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதே போல் மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் படிப்படியாகக் கொண்டுவரப்படும். தாளவாடி மலை கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 99 சதவீத மக்களை சென்றடைந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் இந்த மகத்துவமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இன்று தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் 2 கோடி மக்களை சென்றடைந்து இருக்கிறது. இந்தத் திட்டத்தை பாராட்டி ஐநா சபை விருது வழங்கியுள்ளது. இதை முன்னிட்டு விழுப்புரத்தில் வரும் 29ஆம் தேதி 2 கோடியாவது பயனாளிக்கு மருத்துவ பெட்டகத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்” எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?