ஐசிசி தரவரிசை பட்டியல்.. ஆல்ரவுண்டர் பட்டியலில் ஹர்திக் முதலிடம்
டி-20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் மீண்டும் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச டி-20 போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) துபாயில் வெளியிட்டது. இதில் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியா தொடர் சரிவை நோக்கி சென்ற நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சினைகளை சந்தித்தார். ஆனால் தற்போது பல தடைகளை கடந்து ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா 244 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து மீண்டும் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியுள்ளார். டி20 உலக கோப்பை தொடருக்கு பின் வெளியான தரவரிசையில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் திலக் வர்மா, 806 புள்ளிகளுடன் 3 வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா தொடரில் நன்றாக விளையாடிய திலக் வர்மா 72வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்பிரிக்கா 'டி-20' தொடரில் 2 சதம் உட்பட 280 ரன் குவித்த இவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். சஞ்சு சாம்சன் டி20 தரவரிசையில், 22வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசியின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் 828 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும் முதலிரண்டு இடங்களில் இங்கிலாந்தின் பில் சால்ட் 828 உள்ளனர். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 788 புள்ளிகளுடன் 3வது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 656 புள்ளிகளுடன் 12வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்பிரிக்க தொடரில் இவர் 8 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இத்தொடரில் 12 விக்கெட் கைப்பற்றிய இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி 566 புள்ளிகளுடன், 28வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ரவி பிஷ்னோய் 666 புள்ளிகள் பெற்று 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் இங்கிலாந்தின் அடில் ரஷித் 701 புள்ளிகளுடன் நீடிக்கிறார்.
What's Your Reaction?