சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... அடக்குமுறையால் ஒடுக்க முயலும் திமுக... எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
குற்றம் செய்தவர்களை பிடிப்பதை விட்டுவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவது ஏன்? என திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30 நாட்களாக போராடி வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் மும்முனை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி, அமைச்சர்கள் சண்முகம், டி.ஆர்.பி. ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர், சாம்சங் நிர்வாகத்தினர், தொழிலாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், சாம்சங் தொழிலாளர்கள் இன்னும் போராட்டத்தை கைவிடவில்லை.
காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை இரவோடு இரவாக போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், ஊழியர்கள் போராட்டத்துக்காக போட்டிருந்த பந்தலை போலீஸார் அகற்றியுள்ளனர். அப்படி இருந்தும் சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் சாம்சங் தொழிலாளர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி அவசர ஆடகொணர்வு வழக்காக விசாரிக்க வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து இந்த விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்தும், தமிழக அரசின் நடவடிக்கை பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட்டன. ஆனால், தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என தெரிவித்துள்ளார். உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் ஸ்டாலினுக்கு, சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில்… pic.twitter.com/l5mOYWjgmp — Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 9, 2024
What's Your Reaction?