காவல்துறையினர் அழுத்தத்தின் காரணமாக ஞானசேகரனை சிறையில் அடைத்துள்ளனர்.. நீதிமன்றத்தில் மனு
காவல்துறையினர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தான் தனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக ஞானசேகரன் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றவாளி ஞானசேகரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஞானசேகரனுக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் எழும்பூரில் உள்ள சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை நடத்தினர். குற்றவாளி ஞானசேகரனை குரல் பரிசோதனைக்காக சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள தடயவியல் துறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் உதவியோடு ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடைபெற்றது. தடயவியல் துறை துணை இயக்குநர் சோபியா, உதவி இயக்குநர் நளினி நடராஜன், தொழில் நுட்பபிரிவு அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனையும் நடைபெற்றது.
குற்றவாளி ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்னை சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் இன்று (பிப். 25) ஆஜர்ப்படுத்திய நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகலையும் வழங்கியுள்ளனர். தொடர்ந்து, இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரின் தாயார் கங்காதேவி, தன் மகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், காவல்துறையினர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தான் தனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மேலும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கூடிய எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினர் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






