ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. சென்னையில் பறிப்போன 3 உயிர்கள்

சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dec 1, 2024 - 16:48
Dec 2, 2024 - 10:56
 0
ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. சென்னையில் பறிப்போன 3 உயிர்கள்
மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் மெதுவாக நகர்ந்து கரையை கடந்துள்ளது. புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது 70-80 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியது. இதையடுத்து, ஃபெஞ்சல் புயல் மெதுவாக நகர்ந்து 6 மணிநேரத்தில் கரையை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அதிவேகமாக வீசிய காற்றால் சென்னை மெரினா உள்ள்ளிட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்து சேதமடைந்தது. 

புளியந்தோப்பு, மூலக்கடை ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் படகு மூலம் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து வெள்ளம் வடியாத இடங்களில் மோட்டார்களை கொண்டு மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கனமழையால் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவர் இரும்பு கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, வேளச்சேரியில் மின் ஒயர் அறுந்து விழுந்து சக்திவேல் என்ற நபர் உயிரிழந்தார். வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் கொளத்தூரைச் சேர்ந்த இசைவாணன் என்பவர் மழை நீரை வெளியேற்றும் மோட்டார் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, 50 ஹெச்.பி மோட்டார்கள் இயக்கத்தில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'லால் சலாம்' படத்தின் விசுவல் எடிட்டர், பிரவீன் குமார் என்பவர் கேகே நகரில் மளிகை பொருள் வாங்க சென்றபோது மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow