சினிமா

ஸ்பெயின் கார் பந்தயம்: கெத்து காட்டும் நடிகர் அஜித்.. வைரலாகும் வீடியோ

ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித், கெத்தாக கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்பெயின் கார் பந்தயம்: கெத்து காட்டும் நடிகர் அஜித்.. வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.  நடிகர் அஜித் சினிமாவில் எத்தனையோ சாதனைகள் படைத்தாலும் பைக் மற்றும் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 

அண்மையில், பைக்கில் பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவர் பெரும்பாலும் தனது படங்களில் வரும் கார் மற்றும் பைக் ரேஸ்களில் டூப் இல்லாமல் தானே  நடித்துள்ளார். இதனால் விபத்துகள் ஏற்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் நடித்திருப்பார்.2010-ஆம் ஆண்டிற்கு பிறகு கார் ரேஸ் பக்கம் செல்லாமல் இருந்த அஜித் தற்போது தனது இலக்கை நோக்கி மீண்டும் ஓட தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் அணி பங்கேற்றது. 24 மணிநேரம் நடைபெறும் இந்த ரேஸில் தொடர்ச்சியாக காரினை ஓட்ட வேண்டும். ஒரு அணியில் மூன்று முதல் நான்கு ஓட்டுநர்கள் இருப்பார்கள்.  அவர்கள்  தலா 6 மணி நேரம் என்ற கணக்கில் 24 மணி நேரம் காரினை  ஓட்ட வேண்டும். 

மேலும் படிக்க: நீங்கள் சாதித்துள்ளீர்கள்.. நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

இந்த போட்டியில்  அஜித்தின் ரேஸிங் அணி  3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது. இவர்களுக்கு தமிழ் திரைப்பிரபலங்களான ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.  தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றுள்ளார். அங்குள்ள வெலன்சியா நகரில் கடந்த 22-ஆம் தேதி  நடந்த கார் ரேஸில், அஜித் தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரை முந்துவதற்கு முயன்றபோது விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், நடிகர் அஜித் மீண்டும் கெத்தாக கார் ஓட்டும் வீடியோவை அவரது மேலாளர்  சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ‘உங்கள் தைரியத்திற்கு Salute' என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.