வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

Jan 27, 2025 - 07:10
Jan 27, 2025 - 07:13
 0
வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்
தவெக தலைவர் விஜய்

வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

வேங்கை வயல் விவகாரத்தில்,விஜய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறுவிசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை. வேங்கைவயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. எனவே, குறை காணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.

எனவே வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே, கடும் கண்டனத்துக்கு உரிய மனிதத் தன்மையற்ற செயலான வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow