பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபியிடம் மனு
தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரத்து 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் 900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில் கிராமத்திற்குள் அரசியல் தலைவர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை வரும் 19-ஆம் தேதி அல்லது 20-ஆம் தேதி நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக பாதுகாப்பு கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது.. மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்- சசிகலா
விஜய் அங்கு செல்வதால் கூட்டம் அதிகளவில் கூட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு வழங்ககோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்த போலீசார் கிராம மக்களை சந்திப்பதற்கு விஜய்க்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை என்றும் பெரும்பாலும் பரந்தூருக்கு விஜய் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போராட்டக் குழுவினரை சந்தித்து விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பற்றிய விவரங்களை சேகரித்தனர்.
விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இதற்கான பணிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் போது பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக போராட்டக் குழு சார்பில் தமிழிக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?