இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது.. மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்- சசிகலா
ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை இணைந்து கொண்டாடியதில் மகிழ்ச்சி. ஏழை எளிய மக்களுக்கு முதலமைச்சராக இருந்து பல நல்ல திட்டங்களை வழங்கியவர். தமிழ்நாட்டு மக்களுக்காக அதிகம் செய்து உள்ளார். 22 ஆயிரம் நியாய விலைக்கடைகள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் தொடங்கி வைக்கப்பட்டது.
கொடைக்கானலில் பெண்களுக்காக அன்னை தெரசா பல்கலைக்கழகம், தஞ்சை பல்கலைக்கழகம் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு மட்டும் பொறியியல் கல்லூரி நடத்தி வந்த நிலையில் நிதி நெருக்கடி இருந்தபோது தனியாருக்கு பொறியியல் கல்லூரி நடத்த அனுமதி அளித்தார். இன்று தமிழ்நாட்டில் இருந்து பொறியியல் படித்து சென்றவர்கள் தான் உலகம் முழுவதும் கொடி கட்டி பறக்கிறார்கள், அதற்கு காரணமானவர் எம்.ஜி.ஆர் தான்.
1984-இல் ஓசூரில் அரசு டாடா உடன் இணைந்து டைடன் வாட்ச் தொடங்கி வைத்தார். அரசு சார்பில் 12 கோடியே 24 லட்சம் ரூபாய் போட்டார், டாடா 11 கோடி போட்டது இன்று வரை அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்றைய மதிப்பில் 90 ஆயிரம் கோடியாக அது உள்ளது. வருடத்திற்கு இரண்டாயிரத்து 500 கோடி வரை வருமானம் வருகிறது மக்களுக்கு நல்லது செய்ய இதை செய்துள்ளார். இப்போது இருக்கும் இளைஞர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.
வீண் செலவு செய்யாமல் மக்களுக்காக செய்துள்ளார். 17 ஆயிரம் ஹெக்டர் இருந்த விவசாய நிலத்தை 70 ஆயிரம் ஹெக்டர் வரை அதிகரித்து இலவச மின்சாரமும் கொடுத்தார். அன்றைய காலகட்டத்தில் கரும்பு விவசாயத்தில் முதலிடத்திலும் நெல் விவசாயத்தில் இரண்டாம் இடத்திலும் இருந்தது. இப்போது திமுக ஆட்சியில் எப்படி உள்ளது. காமராஜர் சகோதரி, கக்கன் மனைவி, வாஞ்சிநாதன் சகோதரி, திருப்பூர் குமரன் மனைவி, மருது பாண்டியர் வம்சாவளி, பாரதி பேத்தி என பலரின் குடும்பத்தினருக்கு அவர்கள் கேட்காமலே கட்சி எல்லாம் பார்க்காமல் நிதி உதவி செய்தார்.
ஆனால் இன்று திமுகவுக்கு அப்படி சொல்லிக் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. மக்கள் தலைவராக எம்.ஜி.ஆர் இருந்ததால் தான் இன்றும் மக்கள் மனதில் எல்லாம் இடம் பிடித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இன்று திமுக வீண் செலவு செய்கிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்கிறார்கள்.
மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள் மத்திய அரசு திட்டங்களிலேயே உள்ளது, இருப்பதை நாம் சொல்லி தான் ஆக வேண்டும் மக்களுக்கு நல்லது என்றால் அதை ஆதரிக்கத்தான் செய்ய வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் குடிநீர் குழாய் இணைப்புக்காக மத்திய மாநில அரசுகள் பாதி பாதி செலவை ஏற்க வேண்டும். ஒரு ஆண்டுக்கு 4500 முதல் 5 ஆயிரம் கோடி வரை மத்திய அரசு 50 சதவிகிதம் பங்கு கொடுக்கும்.
மாநில அரசு அதன் பங்கை கொடுக்கவில்லை என்றால் வேறு எதற்காக பணத்தை பயன்படுத்துகிறார்கள். இணைப்பு கொடுத்தால் குழாய் போட வேண்டும் அதை இவர்கள் செய்யவில்லை செய்திருந்தால் உடனடியாக மத்திய அரசு நிதி கொடுத்திருப்பார்கள். மத்திய அரசு கொடுத்து நீங்கள் ஒழுங்காக செலவு செய்தீர்களா? அது மக்களை சென்று சேர்ந்ததா? இப்படி தான் ஒவ்வொரு திட்டமும் உள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்தில் 72 ஆயிரம் மத்திய அரசு கொடுக்கும். மீதம் நாம் செலவு செய்து கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் முன்பு அதிமுக ஆட்சியில் அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிதி அளித்தார். மேலும் பசுமை வீடு திட்டத்தில் 3 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள். திமுக வந்த 3 ஆண்டுகள் பிறகு கலைஞர் கனவு திட்டம் என்ற பெயரிலேயே கனவு வந்துவிட்டது. கனவு காணுங்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் என்று கூறினார்.
What's Your Reaction?