கேக்கில் நெளிந்த புழுக்கள்.. கர்ப்பிணி மனைவி சாப்பிட்டதாக வாடிக்கையாளர் குமுறல்
போரூரில் பிரபல தனியார் பேக்கரி கடையில் இருந்து வாடிக்கையாளர் வாங்கி சென்ற கேக்கில் புழுக்கள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது மாமனாரின் பிறந்தநாளையொட்டி சென்னை போரூர் ஜெயா நகரில் உள்ள பிரபல தனியார் பேக்கரியில் பிஸ்தா கேக் ஆர்டர் செய்துள்ளார். நேற்று மாலை அந்த கேக்கை வாங்கி சென்று மாமனார் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது, கேக்கை வெட்டிய போது கேக்குக்குள் இருந்து புழு ஒன்று வெளியே வந்துள்ளது.
உடனே கேக்கின் மற்ற பகுதியை வெட்டி பார்த்ததில் ஆங்காங்கே பச்சை நிறத்தில் புழுக்கள் நடமாடியதை பார்த்து தினேஷ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு கேக்கை கொண்டு சென்று கடை ஊழியரிடம் காண்பித்து நீங்கள் இந்த கேக்கை ஒரு பீஸ் சாப்பிடுங்கள் என தினேஷ் கேட்ட போது ஊழியர் திரு திருவென முழித்தார். வாடிக்கையாளர் கட்டாயப்படுத்தி சாப்பிட சொன்னதுக்கு பிறகு கேக்கின் ஓரத்தில் உள்ள சின்ன பகுதியை சாப்பிட்டார்.
உங்களின் கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு உற்பத்தி செய்யப்பட்ட நாள், எத்தனை நாட்களுக்குள் சாப்பிட வேண்டும் போன்ற எந்த தகவலும் ஏன் பதிவு செய்யவில்லை என வாடிக்கையாளர் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு கடை ஊழியர் எந்த பதிலும் அளிக்கவில்லை. தினேஷின் மனைவி 5 மாதம் கர்பமாக உள்ளதாகவும், கர்ப்பம் தரிக்க சுமார் 4 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும், இந்த கேக்கை சாப்பிட்டதால் அவருக்கு உடல் நலனில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என தினேஷ் கேட்ட கேள்விக்கு கடை ஊழியர் எந்த பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த தனியார் பேக்கரி நிறுவனத்தின் அதிகாரி ஒருவருடன் வாடிக்கையாளர் தினேஷ் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, தவறுதலாக நடந்துவிட்டது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து தருகிறோம். விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என அதிகாரி வேண்டுகோள் விடுத்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், பிரபல பேக்கரியில் இது போன்ற கெட்டுப்போன பொருட்கள் விற்பனை செய்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?