யுஜிசி விதிகள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது, இது அவர்களுக்கான பலவீனத்தை காட்டுகிறது, இந்த நிலைப்பாடு அதிமுக சரிவுக்கான புள்ளியாக அமையும் என்று திருமா கருத்து தெரிவித்துள்ளார்.

Jan 12, 2025 - 15:06
Jan 12, 2025 - 15:15
 0
யுஜிசி விதிகள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
யுஜிசி விதிகள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், விசிக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக பரிமாணம் பெற்றுள்ளது, கடந்த கால் நூற்றாண்டுகளாக தேர்தல் களத்தில் இந்த இயக்கம் கடுமையான நெருக்கடியை கடந்து இந்த மகத்தான வெற்றியை எட்டி உள்ளது, இந்த அதிகாரத்தை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு, சிதம்பர நாடாளுமன்றத் தொகுதி வாக்காளருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த வெற்றி வாய்ப்பதற்கு உற்ற துணையாக இருந்த திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவருக்குமான பொது பேரியக்கமாக சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் என்று மனப்பூர்வமாக தந்துள்ளனர், முதல்வர் அவர்களை கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து திமுக ஒத்துழைப்புக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டோம், ஈரோடு கிழக்கு வெற்றிக்கு உற்றத் துணையாக நின்று பாடுபடுவோம் என்று முதல்வரிடம் பகிர்ந்து கொண்டோம் என்றார்.

யுஜிசி விதிகள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது என்று கூறிய அவர் யூஜிசி வரைவு அறிக்கை ஆபத்தானது. இந்தியா கூட்டணி எதிர்வினை ஆற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

முதல்வருடனான சந்திப்பு சந்திப்பு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது என்று கூறிய அவர் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது, இது அவர்களுக்கான பலவீனத்தை காட்டுகிறது, வெற்றியோ தோல்வியோ அதை எதிர்கொள்வதுதான் அதிமுகவின் சிறப்பு, விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்கிறார்கள், இது பாஜகவின் நிலைப்பாட்டிற்கு ஒத்துழைப்பதற்காக அமையும் என்று கூறினார்.

பாஜக அதிமுகவை வெளியில் தள்ளி பாஜக இரண்டாவது பெரிய கட்சி என்று காட்ட உதவுகிறது, அது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பயன் தராது, மக்களிடத்தில் இருந்த நன்மதிப்பு பாதிக்கப்படும், அதிமுகவின் சரிவுக்கான புள்ளியாக அமையும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது தான் நாட்டுக்கு நல்லது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால்தான் சனாதான சக்திகளை வீழ்த்த முடியும், டெல்லி தேர்தலாக இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஒருவருக்கொருவர் இந்தியா கூட்டணி இணக்கமாக இருக்க வேண்டும் என பேசினார்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது, அது சரி இல்லை, அதனை முற்றிலுமாக கைவிட வேண்டும, அதனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் அதனை பரிசளிப்பதாக முதல்வர் சொல்லியுள்ளார் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow