“அப்பட்டமான பழிவாங்கல் செயல்”…சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்டதற்கு எல்.முருகன் கண்டனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?

தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா? இதுதான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயக ஆட்சியா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்
தூய்மைப்பணியாளர் குறித்து ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கருத்து கூறியதாக கூறி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிலர் கழிவுநீர் உள்ளிட்டவற்றை ஊற்றியும், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த சவுக்கு சங்கரின் தாயாரை 20க்கும் மேற்பட்டோர் சூழ்ந்துக்கொண்டு கேள்விகளை எழுப்பி, அவர்களை மிரட்டும் தொனியில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் – எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்
இந்த நிலையில் சவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அராஜகப் போக்கை கண்டிக்கிறேன்
இந்த நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “திராவிட மாடல் என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் இந்த போலி திராவிட மாடல் திமுக அரசிற்கு எதிராக, அவர்கள் செய்யும் ஊழலையும், முறைகேடுகளையும் பொதுவெளியில் அம்பலப்படுத்துவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் இந்த அராஜகப் போக்கை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
Read more: மின்னல் வேக ஸ்டம்பிங்.. 0.12 நொடியில் SKY விக்கெட்டை எடுத்த Dhoni!
இந்த திமுக ஆட்சியில், அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் ஊழலை, தொடர்ந்து தனது சவுக்கு மீடியா
மூலமாக வெளிக்கொணர்ந்து வருகின்ற சவுக்கு சங்கர் இல்லத்தில், அவர் இல்லாத சமயம் பார்த்து அத்துமீறி நுழைந்திருக்கும் கும்பல் மீது, காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அப்பட்டமான பழிவாங்கல் செயலாகும்.
ஜனநாயக ஆட்சியா?
இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அறிக்கை விடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் இந்த பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா? இதுதான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயக ஆட்சியா? இன்று சவுக்கு சங்கர் மீதும், அவரது தாயார் மீதும் வன்முறையை ஏவி விட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?






