'வேட்டையன்' முதல் சிங்கிள் ப்ரோமா.. ரஜினியுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு கைகோர்த்த மலேசியா வாசுதேவன்!

சுமார் 30 நொடிகள் ஓடும் ப்ரோமோ வீடியோவில் ‘மனசிலாயோ’ பாடலின் தொடக்க வரிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு விருதே கொடுக்கலாம். ஏனென்றால் பாடல் வரிகளை கேட்க முடியாத அளவுக்கு அனிருத்தின் இசை கொஞ்சம் இரைச்சலாக உள்ளதுபோல் தெரிகிறது. நாளை முழு பாடலை கேட்ட பிறகுதான், ''ஆறுக்கு றென்டற கல்லற வெட்டிக்க மா'' என்ற பாடல் வரிகள் படத்துக்கா இல்லை இந்த பாடலை கேட்பவர்களுக்காக என்பது தெரியும்.

Sep 9, 2024 - 00:37
Sep 9, 2024 - 16:26
 0
'வேட்டையன்' முதல் சிங்கிள் ப்ரோமா.. ரஜினியுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு கைகோர்த்த மலேசியா வாசுதேவன்!
Malaysia Vasudevan And Rajinikanth

சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. வேட்டையனில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில்  'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது. இதன் காரணமாக  'வேட்டையன்' படமும் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வசூல் மழை பொழியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'ஜெயிலர்' திரைப்படத்தில் சிறை அதிகாரியாக நடித்த ரஜினி, 'வேட்டையன்' திரைப்படத்தில் மரண தண்டனைக்கு எதிராக போராடும் ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. 'வேட்டையன்' இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'மனசிலாயோ’ நாளை (9ம் தேதி) வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ’ பாடலின் ப்ரோமோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ''ஆறுக்கு றென்டற கல்லற வெட்டிக்க மா.. சில்லற ஒட்டிக்க மா... நெத்தில மா.. இல்லனா ஒத்துக்க மா.. தொட்டா பத்திக்கும் மா'' என்று தொடங்கும் பாடலின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.

என்ன மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் இந்த பாடலை பாடினாரா? என்று அதிர்ச்சியாகிறீர்களா? ஆம்.. மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலமாக பயன்படுத்தி ‘மனசிலாயோ’ என்ற பாடலை அனிருத் உருவாக்கியுள்ளார். சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் - மலேசியா வாசுதேவனின் ஏஐ குரல் கூட்டணியில் 'மனசிலாயோ’ பாடல் உருவாகியுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு 'மனசிலாயோ’ பாடல் முழுவதும் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அநேகமாக இந்த பாடல் 'வேட்டையன்' படத்தின் தொடக்க பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ''எல்லாம் சரி.. ‘மனசிலாயோ’ பாடலின் ப்ரோமோ எப்படி இருக்குனு நீ சொல்லவே இல்லையே?'' என்று கேட்கிறீர்களா? சுமார் 30 நொடிகள் ஓடும் ப்ரோமோ வீடியோவில் ‘மனசிலாயோ’ பாடலின் தொடக்க வரிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு விருதே கொடுக்கலாம். 

ஏனென்றால் பாடல் வரிகளை கேட்க முடியாத அளவுக்கு அனிருத்தின் இசை கொஞ்சம் இரைச்சலாக உள்ளதுபோல் தெரிகிறது. நாளை முழு பாடலை கேட்ட பிறகுதான், ''ஆறுக்கு றென்டற கல்லற வெட்டிக்க மா'' என்ற பாடல் வரிகள் படத்துக்கா இல்லை இந்த பாடலை கேட்பவர்களுக்காக என்பது தெரியும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow