Vishwambhara Teaser: ஏமிரா இதி..? சிரஞ்சீவியின் ஆதிபுருஷ் வெர்ஷன்... விஸ்வம்பர டீசர் எப்படி இருக்கு?
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள விஸ்வம்பர படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபாஸின் ஆதிபுருஷ், கல்கி படங்களை போல அட்வென்ச்சர் ஜானரில் உருவாகியுள்ள விஸ்வம்பர டீசர் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
சென்னை: டோலிவுட்டின் மெகா ஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவி, சமீபத்தில் கின்னஸ் உலக சாதனை விருதைப் பெற்றார். தனது படங்களில் அதிகமான நடன அசைவுகளுடன் டான்ஸ் ஆடியதற்காக, சிரஞ்சீவிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், சிரஞ்சீவி நடித்துள்ள விஸ்வம்பர படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வசிஷ்டா இயக்கத்தில் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
எப்போதும் மாஸ் ஹீரோயிஷம் படங்களில் நடிப்பது தான் சிரஞ்சீவியின் வழக்கம். ஆனால், விஸ்வம்பர படத்தில் சிரஞ்சீவி வேற லெவலில் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். டீசரின் ஆரம்பத்திலேயே கலர்ஃபுல்லான விஷுவல் ட்ரீட்டாக தொடங்குகிறது. டைனோசர், புதிய பிரபஞ்சம் என பிரபாஸின் ஆதிபுருஷ், கல்கி படங்களுக்கே சவால் விடுகிறது விஸ்வம்பர டீசர். ஆம்! கொடூரமான வில்லன், தீப்பிளம்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட அரண்மனை, நீல நிறக் கண்கள், ஏலியன்ஸ் காதுகளுடன் மக்கள் என புதிய உலகையே கண் முன் காட்டுகிறது.
அப்போது குதிரையில் பறந்து வரும் சிரஞ்சீவி, வில்லன்களை புரட்டி எடுக்கிறார். இந்த டீசரின் இறுதியில் ஆஞ்சநேயராக அவதாரம் எடுக்குகிறார் சிரஞ்சீவி. இதையெல்லாம் பார்க்கும் போது பிரபாஸுக்கு ஆதிபுருஷ் படம் போல, சிரஞ்சீவிக்கு விஸ்வம்பர மூவி என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கிராபிக்ஸ், கிராண்ட்டான விஷுவல் என பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விஸ்வம்பர, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது தான் கேள்வியாக உள்ளது. டோலிவுட்டில் இதுவரை பிரபாஸ் தான் விதவிதமாக சாகசங்கள் செய்து வந்தார்.
இந்த வரிசையில் தற்போது டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் இணைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகியுள்ள விஸ்வம்பர, சிரஞ்சீவி ரசிகர்களை விட, குழந்தைகளுக்கான படமாக இருக்கும் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ ஆக்ஷனில் பாலய்யாவுக்கே டஃப் கொடுக்கிறார் நம்ம சிரஞ்சீவி காரு, இப்படியே போனால் டோலிவுட் ரசிகர்களை யாரும் காப்பாற்ற முடியாது எனவும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இன்னொரு நெட்டிசன், “என்னய்யா இது... கிராபிக்ஸ், விஷுவல்ஸ் எல்லாம் இந்தி சீரியல் மாதிரி இருக்கு” என கமெண்ட் போட்டுள்ளார். ஒருவகையில் நெகட்டிவான விமர்சனங்கள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது விஸ்வம்பர டீசர்.
What's Your Reaction?