நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்
மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் (60) தங்க நகையை வாங்கி விற்பனை செய்தும், கைமாற்றிவிடுவதுமான தொழில் செய்து வருகிறார். மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நகை கடைகளில் நகையாகவோ அல்லது தங்க கட்டிகளாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி சென்னையில் 2 கிலோ தங்கத்தை சுப்பிரமணியன் வாங்கிவிட்டு, மதுரை செல்லும் பாண்டியன் எஸ்பிரஸ் ரயிலில் அடுத்த நாள் அதிகாலை மதுரை வந்துள்ளார்.
அப்போது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளனர். பிறகு, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில், ஆட்கள் இல்லாத இடத்தில் வைத்து, 2 கிலோ தங்க நகை மற்றும் செல்போன், 3500 ரூபாய் பணம் ஆகியவற்றை பிடுங்கியுள்ளனர்.
பின்னர், அவரை காரில் இருந்து இறக்கி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது. மேலும், பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியன் உடனடியாக அருகில் உள்ள ஊருக்கு சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து திலகர்திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், ரயில் நிலையம் மற்றும் காரில் கடத்தப்பட்ட இடம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், பாலசுப்பிரமணியன் காரில் கடத்தப்படும் போது 5 பேர் இருந்ததாக தெரிவித்ததன் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், கார் பதிவெண்ணை கொண்டும் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் பாலசுப்பிரமணியனை போன்று, மற்றொரு நகை புரோக்கர்தான் இந்த சம்பவத்தில் மூளையாக இருந்ததும், அவரது தூண்டுதலின் பெயரில் மற்றவர்கள் செயல்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் மேலூர் அருகே சரிகுவலையப்பட்டியை சேர்ந்த பாக்கிராஜ் (39), திருநெல்வேலியை மாவட்டம் நாங்குநேரி அருகே மேல காடுவெட்டி பகுதியை சேர்ந்த முத்து மணிகண்டன் (26), மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் (41) என்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், சென்னையில் இருந்து பாலசுப்பிரமணியன் அடிக்கடி மதுரைக்கு தங்க நகைகளை கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதை அறிந்த மற்றொரு வியாபாரி, தங்களை அணுகி கடத்தலில் ஈடுபட வேண்டுமென கூறியதாக மூவரும் தெரிவித்தனர். இந்த நகை வியாபாரியின் கடத்தலில் மூளையாக செயல்பட்ட சென்னை சேர்ந்த மற்றொரு நகை விற்பனை புரோக்கர் உட்பட தலைமறைவாகியுள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
What's Your Reaction?