திருப்போரூர் கந்தசாமி கோவில் நிலங்களை மீட்க கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், நீதிமன்ற உத்தரவின் படி நிலங்கள் மீட்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகநாத், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்து சமய அறநிலையத் துறை உரிய பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருப்போரூர் கந்தசாமி கோவில் செயல் அலுவலர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு கோவளம், நெமிலி, சாளுவன்குப்பம், கிருஷ்ணன் கருணை உள்ளிட்ட இடங்களில் 18.76 ஏக்கர் நிலங்கள் இருப்பதாகவும் அதில் 11.67 ஏக்கர் நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள 184 பேரை வெளியேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மீனவர்கள், இறால் பண்ணை வைத்திருந்தவர்கள், தனிநபர் ஆக்கிரமிப்புகள் போன்றவை அகற்றப்பட்டு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புது கல்பாக்கம் பகுதியில் கோவில் நிலத்தில் இருந்த சிறுவர் பூங்கா, கிணறுகள், நீர் மேலாண்மை செய்யக்கூடிய அமைப்புகள் அனைத்தும் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் நிலங்களை பாதுகாக்கும் வகையில் 10 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச் சுவர் எழுப்பி, இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தர்கா ஆக்கிரமித்துள்ளதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை தொடர்ந்த வழக்கு தமிழ் நாடு வக்பு தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 123 ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை தொடர்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.