ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Dec 2, 2024 - 14:57
Dec 2, 2024 - 15:34
 0
ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி
அண்ணாமலை-ஹெச்.ராஜா

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான படிப்பை மேற்கொள்ளச் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை திரும்பினார். மூன்று மாத படிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய இவருக்கு விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து, அண்ணாமலை இன்று  பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு சென்றார். அங்கு அவரை மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மேள தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சி மேடைக்கு வந்த அண்ணாமலைக்கு மாலை மற்றும் கிரீடம் அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது, சென்னை, விழுப்புரம், மரக்காணம், திண்டிவனம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. நாளையிலிருந்து நான் களத்திற்கு செல்ல உள்ளேன். விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவி வழங்க உள்ளேன்.  

இன்று கட்சியின் சார்பில் முக்கிய தலைவர்கள் டெல்டா  பகுதிகளுக்கு சென்று அங்கு என்ன பிரச்சனை என்பதை சேகரித்து மத்திய அரசிற்கு தெரிவிக்க உள்ளனர். கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் அப்பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வாழ்வா, சாவா என்கின்ற தேர்தல். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து, தமிழக  பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா சமூக வலைத்தளங்களில் போட்ட இரண்டு பதிவுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் நிற்கும் என்றும் ஹெச்.ராஜாவிற்கு ஒரு மாறுபட்ட நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில், திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில்,  தமிழக  பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா குற்றவாளி என  குறிப்பிட்டு தலா 6 மாத காலம் சிறை தண்டனை  மற்றும் ரூ. 10000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow