காரில் இருந்து குதித்து தப்பியோடிய ‘குருவி’.. கைதானவர்களின் வாக்குமூலம் என்ன?
சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அசோக்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் இம்ரான் கான் (32). இவர் வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி வந்து கொடுக்கும் குருவியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற இம்ரான் கான் கடந்த 29ஆம் தேதி காலை வீடு திரும்பியுள்ளார்.
பின்னர், மதியம் இம்ரான் வீட்டருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த அவருக்கு தெரிந்த நபர்கள் சிலர் மது வாங்கி தருமாறு கூறி இம்ரானை அழைத்து சென்றனர். அசோக் நகர் 7-வது பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அந்த கும்பல் இம்ரானை அங்கு நின்று கொண்டிருந்த காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதனால் பயந்து போன இம்ரான் அசோக் நகர் 11 மெயின் ரோடு அருகே கார் வரும் போது காரில் இருந்து குதித்து அருகில் இருந்த கேஎப்சி கடைக்குள் ஓடி ஒளிந்து கொண்டு உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் குமரன் நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று இம்ரான் கானை மீட்டு சிகிச்சைக்காக கேகே நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் அசோக் நகரை சேர்ந்த சையத் அபுதாகீர் (39), மற்றும் அவரது நண்பர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளி நண்டு ராஜ்குமார் (31), இளங்கோ (30) ஆகிய மூன்று நபர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இம்ரான் கானுக்கும், சையத் அபுதாகிர் என்பவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும், கொடுக்கல் வாங்கல் தகராறில், சையத் தனது நண்பர்களுடன் சேர்ந்து இம்ரான் கானை காரில் கடத்தி சென்று தாக்கியதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மூன்று நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சீனு, குணா உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
What's Your Reaction?