Chennai Gandhi Mandapam : சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுடன் ஆளுநர் ரவி, தூய்மை சேவை [Swachhta Hi Sewa] திட்டத்தின் கீழ் தூய்மை இயக்கத்தில் பங்கேற்றார். பின்னர், தன்னார்வலர்களுடன் இணைந்து தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட தியாகி மட்டுமல்ல, அவர் தூய்மையை வலியுறுத்தினார். தூய்மைப்படுத்துதல் என்பது கடவுளுக்கு சேவை செய்ததற்கு சமம். தூய்மைப்படுத்துதலை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும்.
நமது நாட்டில் பொது இடங்களில் குப்பையை வீசுகிறார்கள். இது சரியல்ல. நல்ல மாற்றத்திற்கான சமூகத்திற்கான அறிகுறி அல்ல இது. பல பல்கலைக்கழகங்களில் தூய்மை பணியை மாதத்தில் ஒரு முறையாவது மேற்கொள்ள் வேண்டுமென தெரிவித்துள்ளேன். பல இடங்களில் நானும் சுத்தப்படுத்தும் பணியில் கலந்து கொண்டுள்ளேன். தூய்மைப்படுத்துவது என்பது ஒரு நாள் பணி அல்ல.
நாம் தினந்தோறும், பொது இடங்களில் குப்பை போடக்கூடாது, பொது இடங்கள் அனைவருக்கும் பொதுவானது. “காந்தி மண்டபத்தில்(Gandhi Mandapam) சுத்தம் செய்யும் பணியில் சில பாட்டில்களை எடுத்தேன், அதில் மது பாட்டில்களையும் கண்டேன், இது காந்தியுடைய கொள்கைகளுக்கு எதிரானது, எனக்கு வருத்தம் அளிக்கிறது” என தெரிவித்தார்.