Terrorist Attack : ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்!
Terrorist Attack in Jammu and Kashmir : ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாதிகள் தாக்குதல் குறைந்து விட்டதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Terrorist Attack in Jammu and Kashmir : இந்தியாவின் மிக அழகிய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள நைட்கம் பகுதியில் சத்ரூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நமது வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதாவது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த நைப் சுபேதார் விபன் குமார் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் என 2 வீரர்கள் தங்கள் உயிரை பறிகொடுத்தனர். அங்கு தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் அண்மை காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஜுன் மாதம் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதன்பிறகு கடந்த ஜுலை மாதம் 8ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டம் பட்னோடா பகுதியில் 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மச்செடி-கிண்ட்லி-மல்ஹர் சாலையில் ராணுவ வாகனத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களின் வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசினார்கள். துப்பாக்கியாலும் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த திடீர் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டம் தேசா பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் தடுப்பு சிறப்பு காவல் துறையினர் இணைந்து வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு அதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் உடலில் குண்டுபாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாதிகள் தாக்குதல் குறைந்து விட்டதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






