முக்கிய பொறுப்பில் எலான் மஸ்க், விவேக் ராமசாமி... அதிகாரிகளாக நியமித்த டிரம்ப்

எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி அரசாங்கத்தின் செயல்திறன் துறையை (DOGE) வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Nov 14, 2024 - 05:08
 0
முக்கிய பொறுப்பில் எலான் மஸ்க், விவேக் ராமசாமி... அதிகாரிகளாக நியமித்த டிரம்ப்
முக்கிய பொறுப்பில் எலான் மஸ்க், விவேக் ராமசாமி... அதிகாரிகளாக நியமித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் போட்டியிட்டார். கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில்,  இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

குடியரசு கட்சி சார்பில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2 முறையாக அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ஆட்சி நிர்வாகத்திற்கு ஏற்ப நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.  டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு உதவிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோரை அந்த நாட்டின் செயல்திறன் துறையின் தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக அரசியலில் கவனம் பெற்றுள்ளதாக அமைந்துள்ளது.

இது குறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க நாட்டின் மீது பற்று கொண்ட விவேக் ராமசாமியும் கூட்டாக இணைந்து அரசாங்கத்தின் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு அமெரிக்கர்களும் இணைந்து எனது ஆட்சி நிர்வாகத்தில் அதிகப்படியான விதிமுறைகளை தளர்த்துவது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது, அரசு நிறுவனங்களை மறுகட்டமைப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்துவார்கள். இது ‘Save America’ இயக்கத்திற்கு அவசியம்.  இது கணினி மூலம் அதிர்ச்சி அலைகளை அனுப்பும்,  நிச்சயம் அரசு நீதியை வீணடிப்பவர்களுக்கு அதிர்வலைகளை தரும். ஜூலை 4, 2026 வரை அவர்கள் இந்த பொறுப்பில் தொடர்வார்கள்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்திறன் துறையானது அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை, வழிகாட்டுதலை வழங்கும். அதேபோல பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும் என்றும், வெள்ளை மாளிகை, மேலாண்மை அலுவலகம் மற்றும் பட்ஜெட் போன்ற விவகாரங்களில் இந்த துறை பங்கு கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow