என்னவா இருக்கும்..! மர்ம பொருளால் அதிர்ந்த பாஜக அலுவலகம்
டெல்லியில் உள்ள பாஜக அலுவலக வளாகத்தின் வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாநிலங்களவையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது தற்போது ஃபேஷன் (Fashion) ஆகிவிட்டது என்றும் இதற்கு பதிலாக கடவுளின் பெயரை பலமுறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்றும் சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.
அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். மேலும், அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு போட்டியாக பாஜகவினரும் போராட்டம் நடத்தினர். அப்போது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போது அவர்களை பாஜகவினர் தடுத்தனர். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், பாஜக எம்.பி பிரதாப் சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட சக உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ராகுல் காந்தி தள்ளிய ஒரு எம்.பி. தன் மீது விழுந்ததில் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதார் சாரங்கி குற்றம்சாட்டினார். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, நான் நாடாளுமன்ற வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றபோது பாஜக எம்.பிக்கள் தன்னை வழிமறித்து தள்ளியதால் இச்சம்பவம் நடந்தது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அமித்ஷாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கரை அவமதித்த மற்றும் எஸ்.சி, எஸ்.டி. சமூகங்களை புறக்கணித்த காங்கிரசின் இருண்ட வரலாற்றையை அமித்ஷா அம்பலப்படுத்தியுள்ளதாகவும் அதனால்தான் அவர்கள் இப்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் தனது சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு காங்கிரஸை விமர்சித்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பாஜகவிற்கு எதிராக கருத்துகளை பகிர்ந்து வந்ததால் பாஜக விழிபிதுங்கிய நிலையில் இருந்தது.
இந்நிலையில், பாஜக-விற்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, டெல்லி தீன் தயாள் உபத்யா மார்க் (Deen Dayal Upadhyay Marg) பகுதியில் உள்ள பாஜக அலுவலக வளாகத்திற்கு வெளியில் மர்ம பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாகவும் யாரும் பயப்பட தேவையில்லை என்றும் காவல்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மர்ம பையில் வெடிகுண்டு போன்ற பொருட்கள் இருக்கின்றதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?