சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. இறுதி அறிக்கை விரைவில் தாக்கல்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Dec 20, 2024 - 16:20
Dec 21, 2024 - 10:04
 0
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. இறுதி அறிக்கை விரைவில் தாக்கல்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் தாக்கியது தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி  உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சரக சட்டம் ஒழுங்கு  துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து  உத்தரவிட்டது. 

இந்த குழு, தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய  அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துவங்கி, பாதிக்கப்பட்ட சிறுமி, தாயார் உள்ளிட்டோரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக கூறி, சீல் வைத்த உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

புலன் விசாரணை முடிவடையும் நிலையில்  உள்ளதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல்  செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல் துறை தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 8-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow