குரூப் 2ஏ முதன்மை தேர்வு முறையில் மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு
குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் ஓஎம்ஆர் முறையில் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இரண்டாயிரத்து 237 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல் நிலை எழுத்துத் தேர்வை கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்விற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏழு லட்சத்து 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஐந்து லட்சத்து 40 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.
முதல்நிலைத் தேர்விற்கான முடிவுகள் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 2 தேர்வுகள் இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு நிறைவடைந்த நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தனி முதன்மைத் தேர்வுகள் (Main Examination) நடத்தப்படும். இதில், குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது. முதல் தாள் தமிழ் மொழித் தகுதி தேர்வாக பேப்பர் மற்றும் பேனா முறையில் நடத்தப்படும். இரண்டாம் தாள் கணினி வழித்தேர்வாக நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே அண்மையில் குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துனர் நிலை இரண்டு காண தேர்வுகள் நடத்தபட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க முடியவில்லை என்றும் மறுத்தேர்வு நடத்திட வேண்டும் என்றும் தேர்வாளர்கள் தேர்வாணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனை பரிசீலனை செய்த தேர்வாணையம் அதேர்வினை ரத்து செய்து அறிவித்தது.
இந்நிலையில், குரூப் 2ஏ பணியிடங்களுக்கு முதன்மை தேர்வு வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 23 ஆயிரம் பேர் எழுத தகுதி பெற்றுள்ள நிலையில் கணிவழி மூலம் இத்தேர்வு வெற்றிகரமாக நடத்தப்படும் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து, குரூப் 2 ஏ பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுகள் ஓஎம்ஆர் (OMR) தாள் முறையில் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகள் தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ், பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-4 பணிக்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?