Senthil Balaji : சிறைவாசத்தில் இருந்து விடுபடுவாரா செந்தில் பாலாஜி?.. உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!

Senthil Balaji Case Update : ''இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் என்ன விசாரிக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் என்ன விசாரிக்கிறார்கள்? இந்த வழக்கு எப்போது முடியும்? என்பது கடவுளுக்குதான் தெரியும்'' என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

Sep 26, 2024 - 02:42
Sep 26, 2024 - 19:44
 0
Senthil Balaji : சிறைவாசத்தில் இருந்து விடுபடுவாரா செந்தில் பாலாஜி?.. உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!
Senthil Balaji Case Update

Senthil Balaji Case Update : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். 15 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் பலமுறை தள்ளுபடி செய்துள்ளன. 

இதனால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி செந்தில் பாலாஜி(Senthil Balaji) உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், ''செந்தில் பாலாஜி தொடர்ந்து 13 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் என்ன விசாரிக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் என்ன விசாரிக்கிறார்கள்? இந்த வழக்கு எப்போது முடியும்? என்பது கடவுளுக்குதான் தெரியும். ஆகவே உடல்நிலையை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று வாதிடப்பட்டது. மறுபக்கம் வாதாடிய அமலாக்கத்துறை அவருக்கு ஜாமீன் வழங்க தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. 

இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி அபை ஓகா தலைமையிலான அமர்வு நாளை காலை 10.30 மணி அளவில் இந்த தீர்ப்பை வழங்க இருக்கிறது. 15 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி சிறைவாசத்தில் இருந்து விடுபடுவாரா? என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடம் எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow