"துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது.." ஸ்டெர்லைட் சம்பவத்தில் உயர் நீதிமன்றம் காட்டம்!

Tuticorin Sterlite Gun Shoot Issue : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 29, 2024 - 21:56
Jul 30, 2024 - 09:47
 0
"துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது.." ஸ்டெர்லைட் சம்பவத்தில் உயர் நீதிமன்றம் காட்டம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - சென்னை உயர்நீதிமன்றம்

Tuticorin Sterlite Gun Shoot Issue : தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 2018ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இச்சம்பவத்தில் 16 வயது இளம்பெண் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர வைத்த இச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. 

தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

அதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள், அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும், அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்கவும் உத்தரவிட்டது, அதேபோல், சொத்து குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

இதையடுத்து, சிபிஐ விசாரணை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர். உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என்றும், இதுபோல் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர். 

மேலும் படிக்க - சாதிவாரி கணக்கெடுப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்த வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல் காவல்துறையினர் தங்கள் தவறை உணர வேண்டும் என்றும் தெரிவித்தனர். கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டுள்ளதாகவும், ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது என்பது தான், தங்களது கவலை என்றும் கூறினர். தூத்துக்குடியில் அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரியும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow