EMPS 2024 Central Government Scheme Extend : சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் நாட்டு மக்களை மின்சார வாகனம் வாங்க ஊக்கப்படுத்துவதற்காகவும் மத்திய அரசு மின்சார இயக்க ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 10,000 சிறிய மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 25,000 மற்றும் பெரிய மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 50,000-மும் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்காக ரூ. 778 கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. முன்னதாக ஜூலை 31ம் தேதியோடு நிறைவுபெறுவதாக இருந்த இத்திட்டம், தற்போது செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரிடமும் மின்சார வாகனங்களை கொண்டு சேர்ப்பதையும் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
EMPS 2024 திட்டத்தின் கீழ் தற்போது 5,60,789 மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 5,00,080 மின்சார இருசக்கர வாகனங்களும் 60,709 மின்சார மூன்று சக்கர வாகனங்களும் அடங்கும்.
நடப்பாண்டின் மார்ச் மாத நிலவரப்படி மின்சார வாகன விற்பனை 3,04,918 யூனிட்களாக இருந்த நிலையில், ஜூன் காலாண்டில் 27% குறைந்து 2,22,267 யூனிட்களாகக் குறைந்துள்ளது. எனவே இதனை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த EMPS 2024 திட்டம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாகன விற்பனை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ், டிவிஎஸ் மோட்டார், எலெக்ட்ரிக் மற்றும் ஏதர் உள்ளிட்டவை இந்தியாவில் மின்சார வாகன விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது மத்திய அரசே இதில் நேரடியாகக் களமிறங்கியுள்ளதால் இந்த ஆண்டு மின்சார வாகன விற்பனையில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: வெளியானது CUET தேர்வு முடிவுகள்!
தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அதிருப்தியில் ஆழ்ந்திருக்கும் நாட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மின்சார வாகனங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனாலும் பெட்ரோல் பல்க்குகள் போல் சார்ஜிங் போர்ட்-கள் அதிகளவில் இல்லாததாலும், நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வது கடிமானதாலும் மின்சார வாகனங்களை வாங்க மக்கள் தயங்குகின்றன. இதுமட்டுமில்லாமல், சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே மின்சார வாகனங்களின் பேட்டரி திடீர் திடீரென தீப்பிடிக்கும் சம்பவங்களாலும் மக்கள் மத்தியில் சற்று தயக்கம் நிலவி வருகிறது. மின்சார வாகன நிறுவனங்கள் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு எண்ட் கார்டு போட்டால் நிச்சயம் மின்சார வாகன விற்பனை ஓஹோ-வென இருக்கும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.