CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு... மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

CM Stalin About Caste Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Jul 29, 2024 - 20:50
Jul 30, 2024 - 09:51
 0
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு... மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
CM Stalin About Caste Census in Tamil Nadu

CM Stalin About Caste Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், திமுக மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைத்துள்ள செய்தியை பகிர்வதில் தனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சாதனை குறித்தும் அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டியுள்ள அவர், இந்தியா முழுவதும் ஒபிசி இட ஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்தலில், அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வது தான் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய ஒன்று என தெரிவித்துள்ளார். அப்போது தான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கை பெற முடியும், இதனை சாதிக்க ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என பதிவிட்டுள்ளார். முன்னதாக கடந்த மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில் சாதிவாரி கணக்கெடுப்பு உடனே தொடங்க வேண்டியதன் அவசியம் பற்றி எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - போலியாக பேராசிரியர்கள் கணக்கு காண்பித்த பொறியியல் கல்லூரிகள்... அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!

இந்தியா வளரும் நாடு என்ற முறையில், வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். முக்கியமாக விளிம்பு நிலையில் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும், என முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல், பின்தங்கிய மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கொள்கைகளை வகுக்கவும், மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் எப்போதும் அடிப்படையாக இருக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்தியா போன்ற நாட்டில், சமூகச் சூழல் என்பது பல்வேறு சமூகங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என சுட்டிக் காட்டியிருந்தார். சமூக முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை வரலாற்று ரீதியாக நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக சாதி இருப்பதால், சாதி அடிப்படையிலான சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு தரவுகள் கிடைக்கச் செய்வது அவசியம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் எழுதியிருந்தார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow