அரசு பள்ளியில் ஆசிரியை கொலை... காதலன் வெறிச்செயல்... தஞ்சையில் பயங்கரம்!

தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nov 21, 2024 - 04:28
 0
அரசு பள்ளியில் ஆசிரியை கொலை... காதலன் வெறிச்செயல்... தஞ்சையில் பயங்கரம்!
அரசு பள்ளியில் ஆசிரியை கொலை... காதலன் வெறிச்செயல்... தஞ்சையில் பயங்கரம்!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியை சேர்ந்தவர் ரமணி (26). இவர் தஞ்சை அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக பணியிட ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் மதன், இவர் வெளிநாட்டில் சில ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு தற்போது சொந்த ஊரான தஞ்சைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இருவரும் சில காலமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தங்களது காதலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைத்த மதன், தனது காதலியான ரமணியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். 

ஆனால் இவர்களது காதலுக்கு ரமணியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று (நவ. 19) ரமணியின் வீட்டிற்கு தனது பெற்றோருடன் சென்ற மதன் மீண்டும் பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மீண்டும் ரமணியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரமணியும் மதனை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் மதன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று (நவ. 20) காலை ரமணி பணிபுரியும் பள்ளிக்கே சென்றுள்ளார் மதன். அங்கு ஆசிரியர்களின் ஓய்வு அறையில் இருந்த ரமணியிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ரமணியை மதன் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமணியின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பிற ஆசிரியர்கள் மதனை மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமணியை மாணவர்களும், ஆசிரியர்களும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் படுகாயமடைந்த ரமணி, மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மதனை உடனடியாகக் கைது செய்தனர். மேலும் கொலை நடந்த பள்ளியில் மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத், தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் இருவரும் காதலித்து வந்த நிலையில் ரமணியின் பெற்றோர்கள் தொடர்ந்து அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதும், இதனால் மன அழுத்தத்தில் இருந்த மதன் ரமணியை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பட்டப்பகலில் அரசு பள்ளியில் ஒரு ஆசிரியைக்கு பாதுகாப்பு இல்லாததது திமுக ஆட்சியின் மெத்தனப்போக்கைக் காட்டுவதாக அரசியல் கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow