முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்து வந்த பாதை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல்நலக் குறைவினால் காலமானார். இவர் கடந்த வந்த பாதைகள் குறித்த சில செய்தி துளிகள் இதோ.
1932-ம் ஆண்டு செப் 26-ல் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபின் காஹ் பகுதியில் மன்மோகன் சிங் பிறந்தார். 1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கு இடம்பெயர்ந்தார். 1957 முதல் 1959-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்
1958-ம் ஆண்டு குர்ஷரண் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 1966 முதல்1969 வரையிலான காலக்கட்டத்தில் ஐ.நா-வின் வர்த்தகம், வளர்ச்சி கழகத்தில் பணியாற்றினார்.
1969 முதல் 1971-ஆம் ஆண்டு வரை டெல்லி பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 1972 முதல் 1976-ஆம் ஆண்டு வரை இந்திய நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்திருக்கிறார். 1982 முதல் 1985-ஆம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். 1985-ஆம் ஆண்டு இந்திய பொருளாதார கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்.
1985 முதல் 1987-ஆம் ஆண்டு வரை இந்திய திட்டக்கமிஷன் துணை தலைவராக பதவி வகித்தார். 1990 முதல் 1991 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார். பின்னர், 1991ல் யு.ஜி.சி.தலைவராக இருந்தார். 1991-ஆம் ஆண்டு அசாமில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். 1995-ல் இரண்டாம் முறையாக ராஜ்யசபா எம்.பி ஆனார். 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சரானார்.
பின்னர், 2001-ல் மீண்டும் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2004-ஆம் ஆண்டு வரை வாஜ்பாயி ஆட்சியின் போது ராஜ்யசபாவில் எதிர்க்கட் தலைவராக இருந்தார். 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை இந்திய நாட்டின் 13-வது பிரதமராக 10 ஆண்டுகாலம் மன்மோகன் சிங் தொடர்ந்து பதவி வகித்து வந்தார். 2024 ஏப்ரலில் ராஜ்யசபா பதவிக்காலம் நிறைவானதையொட்டி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மன்மோகன் சிங் அறிவித்தார்.
மன்மோகன் சிங் பற்றிய 4 சுவாரஸ்ய தகவல்கள்:
மன்மோகன் சிங் பிறந்த பஞ்சாபின் காஹ் கிராமத்தில் 12 ஆண்டுகளாக மின்சாரமும் இல்லை பள்ளியும் இல்லை. தொலைதூரத்தில் இருந்த பள்ளி சென்று படித்து வந்த அவர் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் படித்து வந்தார். மன்மோகன் சிங்கிற்கு ஹிந்தி பேசத்தெரியும் ஆனால் வாசிக்கத் தெரியாது. அவர் பிரதமராக இருந்த காலத்தில் அவரது உரை உருது மொழியில் எழுதப்பட்டிருக்கும்.
1962-ல் முன்னாள் பிரதமர் நேரு அமைச்சரவையில் இடம் பெற விடுத்த அழைப்பை பேராசிரியர் பணி காரணமாக மன்மோகன் சிங் நிராகரித்தார். 1999-ல் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. குறிப்பாக லோக் சபாவுக்கு அவர் தேர்வானது கிடையாது.
What's Your Reaction?