மாணவி வன்கொடுமை விவகாரம்.. விசாரணை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமைக்குள்ளான மாணவி மற்றும் அவரது உறவினரிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Dec 31, 2024 - 07:46
Dec 31, 2024 - 07:52
 0
மாணவி வன்கொடுமை விவகாரம்..  விசாரணை குறித்து தேசிய மகளிர் ஆணையம்  விளக்கம்..!
விசாரணை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில்,  தேசிய மகளிர் ஆணையம் இன்றும் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவியை கடந்த 23ஆம் தேதி இரவு, ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

முதற்கட்டமாக நேற்று விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகம் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடங்களில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணை குறித்தும், மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக தேசியம் மகளிர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய மகளிர் ஆணைய குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது உறவினரிடம் நடந்த தகவல் குறித்து கேட்டறிந்து வாக்குமூலமாக பெற்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக தேசிய மகளிர் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரியிடம் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.  மேலும் இந்த வழக்கு தொடர்பாக கவர்னரை சந்தித்து விவரங்களை கேட்டு அறிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமின்றி இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை வழங்கியிருப்பதாகவும், டிஜிபி, காவல் ஆணையர் ஆகியோரை சந்தித்து விவரங்களை கேட்டு அறிந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணைய விசாரணை குழுவிடம் உள்துறை செயலர், டிஜிபி, காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளனர்.  அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு டெல்லியில் இருந்து வந்த தேசிய மகளிர் ஆணையக் குழு முதற்கட்ட விசாரணை நடத்தி உள்ளனர். ஆய்வுக்கு பின்னர் ஆளுநரை சந்தித்த நிலையில், பின்னர் தமிழ்நாடு விருந்தினர் மாளிகைக்கு தேசிய மகளிர் ஆணைய விசாரணை குழுவினர் வந்தனர்.

அப்போது மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார், தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால்,  சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் தேசிய மகளிர் ஆணைய விசாரணை குழுவினரை நேரில் சந்தித்து பேசினர். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை மற்றும் எடுத்துள்ள நடவடிக்கைகள் டிஜிபி, காவல் ஆணையர் விளக்கம் அளித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை  நடந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow