பழ. நெடுமாறன் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கும்..? நீதிபதி கேள்வி
பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்த நிலையில் மூன்று வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
காலாவதியான தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரக்கோரி உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் கடந்த 2022-ம் ஆண்டு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து பழ. நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் படிக்க: 20 லட்சம் ரூபாய் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கைது.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை அளித்த எதிர்மறை அறிக்கை காரணமாக பாஸ்போர்ட் நிராகரித்தாக தெரிவித்தார். மேலும், அந்த அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை எனக் கூறினார். தொடர்ந்து, குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி பாஸ்போர்ட்டை நிராகரிக்க முடியாது எனவும் வாதிட்டார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக தமிழக மக்கள் இருக்குமாறு பழ.நெடுமாறன் பேசியது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, இலங்கை உடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் விண்ணப்பதாரர் வெளிநாட்டுக்கு சென்றால் அந்த நாட்டுடன் இந்தியாவுக்கு உள்ள நட்புறவு பாதிக்கப்படும் என பாஸ்போர்ட் அலுவலர் கருதினால் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என கூறினார்.
மேலும் படிக்க: சொத்து குவிப்பு வழக்கு.. புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏக்கு சிறை தண்டனை உறுதி
மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.சவுந்தர், மனுதாரர் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கப்படும் என்பது குறித்து பாஸ்போர்ட் அதிகாரி எந்த காரணத்தையும் விளக்கவில்லை என்று கூறினார். தொடர்ந்து, விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், இரண்டு வாரங்களில் பாஸ்போர்ட் அதிகாரியிடம் விளக்கம் அளிக்க பழ.நெடுமாறனுக்கு உத்தரவிட்ட நீதிபதி எஸ்.சவுந்தர், அவரது விளக்கத்தை பெற்ற பின் மூன்று வாரங்களில் பழ.நெடுமாறன் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
What's Your Reaction?