சொத்து குவிப்பு வழக்கு.. புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏக்கு சிறை தண்டனை உறுதி
சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி பொதுப்பணித் துறையில் மேற்பார்வை பொறியாளராக பணியாற்றிய ஆனந்தன், 1997-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஆனந்தனின் மனைவி மற்றும் மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அசோக் ஆனந்த் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
இவர்களுக்கு எதிரான வழக்கை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கு விசாரணையில் இருந்தபோது ஆனந்தின் மனைவி மரணம் அடைந்தார். இதனால் அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்த் மீதான வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிமன்றம், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
மேலும், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அரசு அதிகாரி ஆனந்த் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்கு தொடர்பான ஆதாரங்களை ஆராய்ந்ததில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை சிபிஐ சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி, இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
மேலும் படிக்க: பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டு பிடித்த காவல்துறை.. வெடிகுண்டு, பட்டாகத்தி பறிமுதல்
சொத்துக்கள் குறித்து விளக்கம் அளிக்க வழங்கிய அவகாசத்தை பயன்படுத்தாமல், சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவுகளை பயன்படுத்த முடியாது. புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகளை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதை அனுமதித்தால், பொது ஊழியர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுவர் எனத் தெரிவித்து, இருவரின் மேல் முறையீட்டு மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?